AvadiInfo

வீட்டு வாடகைப் பிரச்சனை

0
tolet

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வீடு மற்றும் கடை வாடகை வரைமுறையில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகளும், நடுத்தர குடும்பத்தினரும் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவள்ளூர், பெரியகுப்பம், பூங்காநகர், ஜெயாநகர், வி.எம்.நகர், மணவாளநகர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், மப்பேடு, வேப்பம்பட்டு, திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என பல நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்ளன.

தலைநகரமான சென்னையில் சம்பளத்தில் பாதியை விழுங்கும் வீட்டு வாடகைப் பிரச்னையை சமாளிக்க முடியாமல் அருகில் உள்ள மாவட்டமான திருவள்ளூர் மற்றும் சென்னையை ஒட்டிய இம்மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கு மக்கள் அதிகளவில் குடியேறுகின்றனர். வெளியூர்களில் இருந்து வருவோரும் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை நாடி வருவதால் இம்மாவட்டத்தில் வீட்டு வாடகை நாளுக்கு நாள் வரைமுறையில்லாமல் உயர்த்தப்பட்டு வருகிறது.

ஒரு படுக்கை அறை, ஹால் மற்றும் சமையலறை கொண்ட 500 சதுர அடிக்கும் குறைவான ஒரு வீட்டுக்கு ரூ. 3,500 முதல் அதிகபட்சமாக ரூ. 6,000 வரை, வீடுகள் உள்ள பகுதிக்கேற்ப வசூலிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும், ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சில ஊராட்சிகளிலும் இந்த தொகை வசூலிக்கப்படுகிறது.

கல்லூரிகள் உள்ள பகுதியான மணவாளநகர், திருப்பாச்சூர், அரண்வாயல், ஆவடி, திருத்தணி, திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, வெங்கல், கவரப்பேட்டை போன்ற பகுதிகளில் வெளிமாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து வந்து வரும் மாணவ மாணவிகள் வாடகை வீடு எடுத்து குழுவாகத் தங்கிப் படிக்கின்றனர். இந்த பகுதிகளில் மாணவர்கள் அதிகளவில் வருவதால் மேற்கண்ட பகுதிகளில் வீட்டு வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது.

இது தவிர 100 சதுர அடி கொண்ட ஒரு கடைக்கு குறைந்த பட்சம் 2,000 முதல் 4,000 வரையிலும், அதற்கு மேல் உள்ள (200 சதுர அடி) கடைகளுக்கு ரூ. 6,000 முதல் 15,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறு வியாபாரிகளும், புதிதாக சுய தொழில் தொடங்க முற்படுவோரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

உதாரணமாக எந்த ஒரு கடையாக இருந்தாலும் அதில் வாடகை, மின்சார கட்டணம், பராமரிப்பு கட்டணம் என (தற்போதைய நிலை) குறைந்த பட்சம் 3000 ஒதுக்க வேண்டியுள்ளது. அது தவிர ஒரு பணியாள் இருந்தால் அவருக்கு குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரம் மற்றும் கடை உரிமையாளருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் லாபம் என கணக்கிட்டாலும் ஒரு மாதச் செலவு ரூ. 12 ஆயிரத்தை நெருங்குகிறது. சொந்த வீடு மற்றும் நிலம் உள்ளவர்கள், அதில் மாற்றம் செய்து கடை அல்லது வீடாக மாற்றி வாடகைக்கு விடுவதையே தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

வாடகைக்கு கட்டுப்பாடு தேவை: நகராட்சி, பேரூராட்சிகளில் வீடு மற்றும் கடைக்கு கட்டப்படும் வரியை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் பொதுமக்கள் செலுத்தும் வரிக்கேற்ப 2 அல்லது 3 மடங்குக்கு மேல் வாடகை இல்லாதவாறு நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

இதன் மூலம் நடுத்தர குடும்பத்தினரும், தொழில் செய்ய முன்வரும் இளைஞர்களும் பொருளாதாரத்தை சமாளித்து வெற்றி காண முடியும்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறியதாவது: இதுபோல் அதிக வாடகை கொடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுவது உண்மைதான்.

ஆனால் நகராட்சி நிர்வாகம் இதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதுகுறிது தமிழக அரசு உரிய ஆய்வு மேற்கொண்டு புதிய சட்டம் குறித்து அரசாணையை வெளியிட்டால் அதன் பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்து கூடுதல் வாடகை வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

Source – Dinamani

January 26, 2013 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>