AvadiInfo

பொறியியல் விண்ணப்பம் மே 6; மருத்துவ விண்ணப்பம் மே 11 – தேதிகள் அறிவிப்பு

0
be

சென்னை: தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 6ம் தேதியும், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 11ம் தேதியும் துவங்குகின்றன.

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோக தேதிகள் அறிவிக்கப்பட்டன.

மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே 11ம் தேதி துவங்கும். 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை பல் மருத்துவக் கல்லூரியிலும் கிடைக்கும்.

மருத்துவக் கல்வி இயக்கக இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தரப்பட உள்ளன. மே 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே 29ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

வினாத்தாள் மறு திருத்தம் முடியும் தேதிக்கு ஏற்ப, ஜூன் 12ல், கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக துவக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், 100 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு முயற்சித்து வருகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு முடிந்துள்ளது; விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்ஜி., விண்ணப்பம்

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே 6ம் தேதி துவங்குகிறது. சென்னையில் நான்கு இடங்களிலும், தமிழகம் முழுவதும், 60 இடங்களிலும் வினியோகம் செய்யப்படும். 2.40 லட்சம் விண்ணப்பங்கள் தரப்படும். அண்ணா பல்கலை வளாகத்தில் 29ம் தேதி வரையும், பிற இடங்களில் 27ம் தேதி வரையும் கிடைக்கும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 29ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில், திருநங்கை என்ற பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பத்தின் விலை 500 ரூபாய். எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு, 250 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எத்தனை இடங்கள்?

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கிறது. ஓமந்தூரார் புதிய அரசு கல்லூரியில் 100 இடங்களுக்கான அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியைப் பொறுத்தே, சுயநிதி கல்லூரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டிற்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற விவரம் தெரியவரும்.

இன்ஜினியரிங் படிப்புக்கு, அண்ணா பல்கலையின் 16 அரசு கல்லூரிகளும், 596 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. இதில், 2.30 லட்சம் இடங்கள் உள்ளன. மூன்று சுயநிதி கல்லூரிகள் மூட அனுமதி கோரி உள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு பற்றிய விவரங்கள், ஏப்., 30ல் தெரியும். அதன்பிறகே, இன்ஜினியரிங் இடங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் கிடைக்கும்.

சென்னையில் எங்கே?

சென்னையில், நான்கு இடங்களில் இன்ஜி., படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலை, புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.இ.டி., மற்றும் பாரதி மகளிர் கல்லூரியில், மே 6ம் தேதி முதல் விண்ணப்பங்கள் கிடைக்கும். தமிழகம் முழுவதும், 60 இடங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Kalvimalar – Dinamalar

April 28, 2015 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>